வசிஷ்ட முனிவரிடம் பெற்ற சாபத்தால் காமதேனு இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றது. இதனால் இத்தலம் 'ஆவூர் பசுபதீஸ்வரம்' என்று பெயர்.
மூலவர் 'பசுபதீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். இக்கோயிலில் இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. 'மங்கள் நாயகி' மற்றும் 'பங்கஜவல்லி' என்னும் திருநாமங்களுடன் அழகாகக் காட்சித் தருகின்றனர்.
பிரகாரத்தில் நிருத விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் வில்லேந்திய சுப்பிரமண்யர், சப்த கன்னியர், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
இக்கோயிலில் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், காள பைரவர், உன்மத்த பைரவர் என்று ஐந்து பைரவர்கள் ஒரே சன்னதியில் உள்ளனர். இவ்வாறு ஐந்து பைரவர்கள் ஒரே இடத்தில் காட்சி தருவது வேறு எந்தக் கோயிலிலும் கிடையாது.
கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று.
பிரம்மா, இந்திரன், சப்த ரிஷிகள், தேவர்கள், சூரியன் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|